சென்னை, மேற்கு தாம்பரம், கடப்பேரி, 4வது தெருவில் வசித்து வருபவர் சாகுல்(20), கடந்த 13ஆம் தேதி சேலையூர், அகரம்தென் சந்திப்பில் உள்ள தனியார் நீச்சல் குளம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் சாகுலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 1000 மற்றும் செல்ஃபோனை பறித்து சென்றனர்.
இது குறித்து சாகுல், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கும்பலை காவல் துறையினர் தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சேலையூரை சேர்ந்த சரவணன்(25), வேங்கைவாசலை சேர்ந்த அரவிந்தன்(20), மனோ(21), காமராஜபுரத்தை சேர்ந்த வினோத்(25), கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கௌதம் (எ) அப்பு(25), ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் சரவணன் என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியை வைத்துக் கொண்டு ‘‘தாம்பரம் பகுதியில் தாங்கள் தான் கிங்‘‘ என்று ரவுடி தோரணையில் பேசிய வீடியோக்களை தனது நண்பர்களுக்கு வாட்சப்பில் அனுப்பி பதிவிட்டது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.