சென்னையில் இரு தினங்களாகப் பெய்த கனமழையின் காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திருவேற்காடு, வானகரம், அடையாளம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதைத்தொடர்ந்து தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஜனவரி 2 தேதி அயனம்பாக்கத்தை சேர்ந்த வேணுகோபால் அவரது மனைவி இரு மகன்களுடன் அபாயத்தை உணராமல் வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை வெள்ள நீர் அடித்துச் சென்றது. இதில் வேணுகோபால் அவரது மனைவி ஒரு மகனை அருகே இருந்தவர்கள் மீட்டுள்ளனர். அவரது மூத்த மகன் குமரேசன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
![வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாய் பேச முடியாத சிறுவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-madhuravoyal-familystuckedinflood-photo-tn10022_02012022185713_0201f_1641130033_172.jpg)
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 மணி நேரம் இந்த பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக கோயம்பேடு, ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீட்புப்படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் குமரேசன் வாய் பேச முடியாதவர் என கூறப்படுகிறது. கடந்த மாதம் இதே வெள்ள நீரில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகும் தரைப்பாலத்தின் அருகே உரிய பாதுகாப்பு போடப்படவில்லை என கூறப்படுகின்றது. தடுப்புகள் போட்டாலும் அங்கு வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மயிலாடுதுறையில் திருமணமண்டபம் திறப்புவிழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு