சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரமர் நரேந்திர மோடி இணைந்து மகாபலிபுரத்தில் வருகின்ற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனால் மகாபலிபுரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திபெத்திய மாணவர்களைக் கண்காணிக்க துணை ஆணையர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவின்பேரில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் விடுதிகளில் உளவுத் துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் விடுதிகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர விடுதிகளிலும் சோதனை செய்தனர்.