கரோனா தொற்றின் இரண்டாவது அலையே இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், மூன்றாவது அலை விரைவில் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "கரோனா மூன்றாவது அலை தமிழ்நாட்டில் வர வாய்ப்புள்ளதாகவும், இதன் தாக்கம் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களிடம் இருக்கும் எனவும் மருத்துவ வல்லுனநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தகுந்த முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள் தயாராக இருக்க வேண்டும்.
புதிய அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் குழந்தைகள் நல மருத்துவர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், ஐசியு வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசர காலப் பணிக்காக தயார்படுத்திட வேண்டும்.
பொது மருத்துவம், மயக்கவியல் துறை மருத்துவர்களும் இந்த மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா பாதிப்பைவிட குணமடைந்தோர் விகிதம் 2 மடங்காக உள்ளது' - மா. சுப்பிரமணியன்