சென்னை: பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தின் மூலமே நடைபெற்று வருகின்றன. சென்னை பல்கலைக்கழகம், அரசு நிதி உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அங்கீகாரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி கல்வி இயக்குநரகம் அவர்களுக்கான நிதியுதவியை அளிக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை அரசு உதவி பெறும் கல்லூரிகள் முழுமையாக பின்பற்றுவதில்லை. சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் உள்ள முதல்வர்கள் சிலர் தங்களின் அனுபவத்துக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கல்லூரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஆசிரியர்களின் பணியை கல்லூரிகள் மதித்து விதிமுறைகளின்படி சம்பளம் வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்டக்கோரிய வழக்கு முடித்து வைப்பு