சென்னை கே.கே. நகர் பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி (பிஎஸ்பிபி) பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அப்பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பல வருடங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில், ஆபாச காணொலியை ராஜகோபாலன் பகிர்ந்ததாகவும், இந்த சம்பவத்தில் பல ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில், சம்மந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று (மே.25) சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம், தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரண் விசாரணை நடத்தினார். அவரைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் கலா விசாரணை நடத்தினார்.
தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை இருவரிடமும் காவல் துறையினர் கேட்டு துளைத்தெடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளி வாட்ஸ்-அப் குரூப்பில் ஆபாச காணொலிகளை ராஜகோபாலன் பதிவிட்ட போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்த புகாரை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கிய போது ஏன் கண்டுகொள்ளவில்லை?, பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு முறையாக இயங்காதது ஏன்? எனப் பல கேள்விகளை கேட்டு காவல் துறையினர் துருவித் துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளிக்க துணை ஆணையர் ஜெயலட்சுமி அளித்த செல்போன் எண்ணிற்கு இதுவரை 25 புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்தும் பள்ளி முதல்வர், தாளாளரிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற இந்த விசாரணைக்கு இருவரும் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகள் பரவி வந்த நிலையில் அதனை ஏன் கண்காணிக்கவில்லை என காவல் துறையினர் கேட்டதற்கு சமூக வலைதளங்களில் வந்த பின்னர் தான் தங்களுக்கு அது குறித்து தெரியும் என்றும், தெரிந்தவுடன் ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்து விட்டதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் கேள்விகளை எழுத்து, காணொலி அடிப்படையில் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு 94447-72222 இதுவரை சுமார் 25 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 புகார்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 15 புகார்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவிகள் அனுப்பியுள்ளனர். இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளியை விமர்சித்து டி.எம்.கிருஷ்ணா ட்வீட்