சென்னை: மந்தைவெளியில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற 21 என்ற எண் கொண்ட பேருந்தில் புதுக்கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று தாளம் போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இதனால் பேருந்து ஓட்டுநர் சங்கர் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்டித்துள்ளார்.
மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் ஓட்டுநர் சங்கர் பேருந்தை பல்லவன் சாலை பணிமனையின் உள்ளே திருப்பினார். இதனால் கல்லூரி மாணவர்கள் சுமார் 30 நபர்கள் நடத்துனர் ஜெரின் என்பவருடன் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் திடீரென மாணவர்கள் நடத்துனர் ஜெரினிடம் தகராறில் ஈடுபட்டு பேருந்திலிருந்து கீழே தள்ளியதால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பயணிகள் மாணவர்களை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர். அப்போது பணிமனையில் இருந்த மற்றொரு நடத்துனர் அருண்குமார் தப்பி சென்ற மாணவர்களை பிடிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்து அவருக்கும் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்துனரை தாக்கியது தொடர்பாக 4 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல 52 பி என்ற பேருந்தில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பேருந்து சைதாப்பேட்டை பணிமனை அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த போது, பணிமனை கிளை மேலாளர் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை உள்ளே செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. மாணவர்கள் பணிமனை கிளை மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டதால், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
உடனே பணிமனையில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் வாக்குவாதம் செய்த மாணவர்கள் ஆகியோரிடம் சமரசம் பேசி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை கிண்டி போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:புத்தகப்பையில் பட்டாக்கத்தி: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்