திருச்சி மாவட்டம் செட்டியாப்பட்டியைச் சேர்ந்த ஒப்பாயி, அவரது மகன் ராமமூர்த்தி மற்றும் பேரன் குணசேகரன் ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வயல் பகுதியில் இருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில், வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சில நாட்கள் கழித்து இதேபோன்று சென்னை சூளைமேடு அருகே தரையில் புதைக்கப்பட்டிருந்த மின்சார வயர் வெடித்து சிதறி அவ்வழியாக நடந்து சென்ற லீமா ரோஸ் மீது தீப்பொறி விழுந்ததில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக செய்திதாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கினை விசாரித்த மனித உரிமை ஆணையம் இன்னும் நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.