சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன வெளியிட்டுள்ள 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு:
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காகப் போராடியவர்கள் குடியரசு முன்னாள் தலைவர், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரைப் போற்றும்வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவச்சிலைகள் நிறுவப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்திலும், தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும், ஏபிஜே அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என உருவச்சிலை அமைக்கப்படும்.
மேலும், ரவீந்திரநாத் தாகூர், நாவலர் நெடுஞ்செழியன், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, மு. வரதராசனார் உள்ளிட்டோருக்குச் சிலைகள் வைக்கப்படும். தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கூட்ட அரங்கம் அமைக்க பழுதடைந்த கட்டடங்கள் மின்கலங்கள் மற்றும் சீரமைப்பு உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
இணைய வழியாக விளம்பரம்
அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசின் செயல்பாடுகள், திட்டங்களைப் பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும். அரசின் விளம்பரங்களுக்கு மின் சுவர்கள் உருவாக்கப்படும்.
அரசு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை, வண்ணப் புகைப்பட நகல் சுருள்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கவும், தற்போது எடுக்கப்படும் புகைப்படங்களை ஆவணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காக விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகப் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கருணாநிதி எழுதுகோல் விருது, ஐந்து லட்சம் ரொக்கத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஊடகவியலாளர்களுக்கான அறிவிப்புகள்
இளம் பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையில் சிறந்து விளங்கவும் அதன் நுணுக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளம் பத்திரிகையாளர்களைத் தேர்வுசெய்து இந்திய அளவில் புகழ்மிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னல் என்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும்.
பத்திரிகையாளர்கள் தங்கள் திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித் திறன், நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
பனிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதி மூன்று லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பத்திரிகையாளர்கள் நலன்காக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
பழுதடைந்துள்ள சேலம், திருச்சி, மதுரை, விருத்தாசலம் அரசு அச்சக கட்டடங்கள் ரூ. 4.55 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும். சென்னை அரசு மைய அச்சகத்திற்கு சுமையூர்த்தியும், காகிதம் சிப்பம் கட்டும் இயந்திரமும் கொள்முதல் செய்யப்படும்.
இதையும் படிங்க: விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊக்கத்தொகை