கோவையைச் சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல கட்ட ஊரடங்கினை அமல்படுத்தி, கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கரோனா பரவும் என்பதால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை மே மாதம் முதல் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
இதன் காரணமாக கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல் துறையினர் மதுபானக் கடைகளின் பாதுகாப்புக்காக பணியில்' ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 5,824 டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பாதுகாப்புக்காக 1,827 காவல் நிலையங்களில் உள்ள காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டிய சூழல் எழுந்தது.
குறிப்பாக ஒரு காவல்நிலையத்தில் இருக்கும் 10 காவலர்களில் 6 பேரை டாஸ்மாக் பாதுகாப்பு பணிகளுக்கும் மீதமுள்ள 4 பேரை கரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளுக்கும் தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருவதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போதுமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இல்லாத காரணத்தால் மக்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினரை குறைக்க வேண்டும் அல்லது ஆயுதப்படை போன்ற மற்ற காவல் துறையினரை டாஸ்மாக் கடை பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதே வேளையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கரோனா தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் அதிக காவல் துறையினரை ஈடுபடுத்த உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் தமிழ்நாடு உள்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.