சென்னை: தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், தேசிய அளவிலான தீவிர தடுப்பூசி முகாம் இந்திரதனுஷ் என்ற பெயரில் ஆகஸ்ட் 7 ந் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையும், செப்டம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரையும், அக்டோபர் 9ம்தேதி தொடங்கி 15ம் தேதி வரை என 3 கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு மருத்துவத்துறை முதலிடம் வகித்து வருகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. கரோனா காலத்தில் ஒன்றிய அரசு தடுப்பூசியை அரசிற்கு 75 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதமும் வழங்கியது. ஆனால் அரசில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டதால் அதிகளவில் மக்கள் அரசு மருத்துவமனைகளில் வந்து செலுத்திக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் பெற்று செலுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இருந்த தடுப்பூசியும் பொது மக்களுக்கு போடப்பட்டது. தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதில் குறைபாடுகள் உள்ளன. எனவே தான் தேசிய அளவில் தீவிர தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2.98 லட்சம் தடுப்பூசிகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 6,94,084 தடுப்பூசிகள் குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து விடுபட்டவர்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது. அதில் குறிப்பிட்ட கால அட்டவணையின்படி தடுப்பூசி செலுத்தாத 69,999 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளனர். குழந்தைகளுக்கு ஒரு வயதிற்குள் போட வேண்டிய தடுப்பூசியை போட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். குழந்தைகள் எனக்கு தடுப்பூசி போட வேண்டும் எனக் கேட்காது.
அதேபோல் 13,901 கர்ப்பிணி தாய்மார்களும் தடுப்பூசி செலுத்தவில்லை என கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் தங்களுக்கு பணி சுமை இருப்பதாக கூறுகின்றனர். அவர்களின் உடல்நலன் நன்றாக இருந்தால் தான் குழந்தைகளையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். எனவே கர்ப்பிணி தாய்மார்களும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் தடுப்பூசி போடாதவர்களை கண்டுபிடித்தது போல் அவர்களுக்கு தடுப்பூசியை விரைந்து செலுத்தி முடிக்க வேண்டும்” என பேசினார். அதனைத் தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை அமளியை வீடியோ எடுத்த விவகாரம்.. காங்கிரஸ் பெண் எம்.பி. இடைநீக்கம் ரத்து!