குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஜேஎன்யூ மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ்கோஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆயிஷ்கோஷ், ”ஜனநாயகத்தைக் காக்க நாம் போராடி வருகின்றோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்த நாட்டு மக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்படுகின்றது.
என்ஆர்சி, என்பிஆர் மூலம் சிறுபான்மையினரை நாட்டை விட்டு தூக்கியெறிய பாஜக திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்குத் தேச விரோதிகள் என்று பெயர் சூட்டுகிறார்கள். மாணவர்கள் அரசியல் சார்ந்து செயல்பட உரிமை உள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் பல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிட நினைக்கின்றனர்” என்றார்.
இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முன் நன்கு ஆலோசிக்க வேண்டும் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர், ”ரஜினிகாந்த் மாணவர்களின் குறிக்கோள் குறித்து பேசியுள்ளார். இருப்பினும், மாணவர்களாகிய நாங்கள் தேசப்பற்று பற்றி ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்ட சாவர்க்கரின் வரலாறைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்த நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட சமயத்தில் உள்ள நாடு போல் பார்க்க விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க : ரூ. 40 ஆயிரம் கோடி சேமிப்புப்பணம் - மத்திய அரசு பறிக்க திட்டமிடுவதாக புகார்