சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் WTA 250 புள்ளிகளுக்கான பிரதான போட்டிகள் நேற்று முதல் துவங்கின.
பிரதான சுற்றுகளில், ஒற்றையர் மகளிர் பிரிவுக்கான ஆட்டத்தில், வயல் கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை தண்டி கர்மன் பிரான்ஸ் வீராங்கனையான ச்ளோ பாக்குவெட்டை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 4-6 என கைவிட்டாலும், இரண்டு மற்றும் மூன்றாவது செட்களை 6-4, 6-3 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி 2-1 என புள்ளி கணக்கில் போட்டியை வென்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
அதே போல முதலாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த யூஜினி புச்சார்ட் முதல் சுற்றை 2-0 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். ஸ்விட்சர்லாந்து வீராங்கனை ஜோனே ஜுகர் உடன் மோதிய யூஜினி, 7-6, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில், செக் குடியரசை சேர்ந்த லிண்டா பிருவிர்ட்டோவா, ஜப்பானை சேர்ந்த நாவோ ஹிபினோ, போலந்தை சேர்ந்த கடர்சினா காவா, கனடாவை சேர்ந்த ரெபேக்கா மரினோ உள்ளிட்டோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வீராங்கனை தண்டி கர்மன், "சென்னை விளையாட்டு நகரம், விளையாட்டு நகரத்தில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி. சென்னை ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு மற்றும் ஆரவாரம் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது. முதல் செட்டை கைவிட்டதும், எனக்கு நானே எவ்வாறு சிந்தித்து விளையாட வேண்டும் என நினைத்து விளையாடினேன்.
கடைசி 3 வாரங்களாக நான் உணவு, உறக்கம் இன்றி கடினமாக உழைத்தேன். எனது ஸ்பான்சர்களுக்கு நன்றி. என்னுடைய யுக்திகள் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீராங்கனைகளை பொறுத்து மாறும். எனது எதிரிகளுக்கு எதிராக நான் சரியான யுக்திகளை கையாண்டுள்ளேன்.
இந்தியாவில் டென்னிஸ் துவங்கியது சாபுதா மிர்சாவால் தான், அவர் நிறைய பெண்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளார். நான் இரண்டாவது செட் விளையாடும் போது, சென்னையின் சீதோஷண நிலை, வானிலை மற்றும் மின் விளக்குகள் எனக்கு விளையாடுவதற்கு மேலும் சிரமத்தை கூட்டின. ஆனால் என்னுடைய கடின உழைப்பால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளேன்" என தெரிவித்தார்.
அடுத்ததாக செய்தியாளர்களை சந்தித்த, கனடாவை சேர்ந்த யூஜினி புச்சார்ட், "சென்னையில் இருப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். காயம் மற்றும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் இந்த போட்டிக்கு திரும்பி, வெற்றி பெற்றதை சிறப்பாக உணர்கிறேன். நான் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளேன், மனதை உறுதியாக வைத்துள்ளேன். முதல் செட்டில் தடுமாறியது, சற்று கவனக்குறைவின்மையாக கருதுகிறேன்.
பொதுவாகவே நான் உலகெங்கிலும் பயணித்து இருக்கிறேன், முதல் முறையாக இந்தியாவில் விளையாடுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். வித்தியாசமான கலாச்சாரம், மற்றும் உணவு வகைகளை நான் ரசிக்கிறேன்" என்றார்.
இன்று நடைபெறும் மீதமுள்ள முதல் சுற்று போட்டிகளில், இந்தியாவின் அங்கிதா ரெய்னா ஜெர்மனியை சேர்ந்த தட்ஜனா மரியாவை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு