கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் இலங்கை மீன்பிடி படகு ஒன்று அத்துமீறி, இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக, இந்திய கடற்படை, மத்தியப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கடல் எல்லையில் நின்றிருந்த படகை சுற்றி வளைத்து, அதிலிருந்த ஆறு இலங்கை மீனவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த குரேரா, பெர்னாண்டோ, தேஷாப்பியா, ஜெயதீசா, சதரூவன், அருணகுமார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து படகை சோதனை செய்த போது, அதில் 100 கிலோ கஞ்சா, 150 கிலோ மெத்தாம்பெடாமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி, இலங்கைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கடத்தியதாக, ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.