சென்னை: வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்து நமது நாடு விடுதலை அடைந்த ஆகஸ்ட் 15ஆம் தினம் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் தேசியக்கொடி ஏற்றி நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதோடு, அரும்பாடுபட்டு சுதந்திரத்தை பெற்றுத் தந்த விடுதலைப் போராட்டத் தலைவர்களை நினைவுகூறப்படுகிறது.
அந்தவகையில், நாட்டின் முக்கியப் பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றுவதுடன் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இந்திய ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அருமை உள்ளிட்டவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இதன் ஒருபகுதியாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (ஆக.15) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப். படையினரின் சுதந்திர தினவிழா அணிவகுப்பு மரியாதை மற்றும் பேண்டு வாத்திய மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, அவர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகளையும் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா கண்டு களித்தார்.
பின்னர், உயர் நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க: Ramoji Film City : ராமோஜி பிலிம் சிட்டியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...
உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர்.
நீதிபதிகளில் பலர் பாரம்பரிய உடை அணிந்தபடி வந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதற்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, அனைவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டதோடு, சுதந்திர தின வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் காவலர் விருது: தேனி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்க்கு அறிவிப்பு.. ஏன் தெரியுமா?
முன்னதாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சிறந்த காவலர் விருது மற்றும் முதலமைச்சர் காவலர் விருதுகளை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘மாநிலப் பட்டியலில் கல்வி’ - சுதந்திர தின விழாவில் நீட் தேர்வுக்காக முழங்கிய ஸ்டாலின்!