சென்னை, ராயபுரம் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது, இதனையடுத்து, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதிகளில் அமைந்திருக்கும், கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடாமல் இருக்க மாநகராட்சி அலுவலர்கள் நோய் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பாரிமுனை, என்எஸ்சி போஸ் ரோடு, சௌகார்பேட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் தகுந்த இடைவெளி பின்பற்றாமல், முகக் கவசங்கள் இல்லாமல் பொதுமக்கள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக சுகாதார ஆய்வாளர் செந்தில் தலைமையிலான குழு அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டது. கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஆறு கடைகள், என்எஸ்சி போஸ் ரோட்டில் உள்ள இரண்டு கடைகள் என மொத்தம் 10 கடைகளுக்கு 5 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில் கடைகளில் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இது போன்ற ஆய்வுகள் நடத்தி அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரி ஒருவர், மாநகராட்சி அலுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.