சென்னையில் உள்ள ஐந்து மெட்ரோ ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தபோதிலும், கோடை காலத்தை சமாளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு தெலுங்கு-கங்கா திட்டத்தின்படி 2 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர் கேட்டு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஆந்திர மாநில நீர்ப்பாசன அதிகாரிகள் கண்டலேறு அணையிலிருந்து கடந்த மே 2ஆம் தேதி கிருஷ்ணா நதிநீரை திறந்து விட்டனர்.
பிறகு 152 கி.மீ., கொண்ட கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜீரோ பாயிண்டான ஊத்துக்கோட்டைக்கு வந்தடைந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் மில்லியன் கியூபிக் பீட் (mcft) கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டும். மேலும் கண்டலேறு-பூண்டி கால்வாயில் தினமும் ஆயிரம் கனஅடி வீதம் நீர் வரத்து வந்தால், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு 2 டிஎம்சி நீர் கிடைக்கும் என்றனர்.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து ஒரு நாளைக்கு 700 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுவதால், கிருஷ்ணா நீரை சேமிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் எனவும்; சென்னை மெட்ரோ வாட்டரை பொறுத்தவரை, நகருக்கு சுமார் 1,029 மில்லி லிட்டர் குடிநீரை விநியோகிக்கிறது. இதில், கிட்டத்தட்ட 992 மில்லி லிட்டர் தண்ணீர் பைப்லைன்கள் மற்றும் டேங்கர்கள் மூலம் கூடுதல் பகுதிகள் உட்பட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
மேலும், பூண்டி நீர்த்தேக்கத்தில் உள்ள ஷட்டர்களை சரிசெய்வதற்கான பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், நீர் நிலையில் சிறப்பாக சேமிக்க முடியும் எனக் கூறிய அதிகாரிகள் கிருஷ்ணா நதிநீர் இந்த ஆண்டு நீர் நிலைகளில் போதுமான நீரை சேமித்து வைக்கவும், தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி (பொறுப்பு-பூண்டி ஏரி) கூறுகையில், "தற்போது சென்னையில் உள்ள ஐந்து ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது. எனினும் நாம் ஆந்திர அரசு நமக்கு கொடுக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரின் பங்கைத்தான் கேட்டுள்ளோம். மேலும் நமக்கு வீராணம் ஏரியிலிருந்து 63 கனஅடி நீர் தினந்தோறும் வருகிறது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை" எனத்தெரிவித்தார். மேலும், சில தினங்களுக்கு முன்பு புறநகரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையினால் நீர் வரத்து வந்தது என்றார்.
இதையும் படிங்க: Mocha Cyclone: வலுப்பெற்றது 'மோக்கா' புயல்; 9 மாவட்டங்களில் கனமழை!