சென்னை : திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடரும் நிலையில், சோதனையின் போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, நிலக்கரி சுரங்கம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அதிக பணம் பெற்றது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக தீவிர சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவிதா கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 40 இடங்களிலும் நான்காவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சுமார் 90 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் சோதனை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சில முக்கிய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரி அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் ஒன்றரை கோடி ரூபாய் வரை கைப்பற்றியதாக கூறப்பட்ட நிலையில், சவிதா கல்வி குழுமத்தில் இருந்து மட்டும் 10 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடத்தில் இருந்து மேலும் 2 கோடியே 50 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அதேபோல சவிதா கல்வி குழுமத்தில் இருந்தும் மேலும் 2 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நான்கு நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில், இதுவரை எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இருந்து 4 கோடி ரூபாயும், சவிதா கல்வி குழுமம் தொடர்புடைய இடத்தில் இருந்து 12 கோடி ரூபாயும் என மொத்தம் 16 கோடி ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அது தொடர்பாக எம்.பி ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த ஆவணங்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு!