சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவரை சார்ந்து உள்ளவர்களின் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் இன்று (நவ.3) காலையிலிருந்து வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (நவ.2) இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் வருமான வரித்துறைக்குச் சொந்தமான கார் ஒன்றும் மற்றும் மஞ்சள் போர்டுடன் கூடிய தனியார் வாடகை கார்கள் ஐந்தும் வந்து நின்றன. இனோவா, சைலோ போன்ற அந்த தனியார் வாடகை கார்கள் அனைத்திலும் கவர்மெண்ட் ஆப் இந்தியா என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
நேற்று (நவ.2) இரவு டெல்லி, மும்பை பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து விமானங்களில் இறங்கி வந்த, சுமார் 15க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அந்த கார்கள் புறப்பட்டுச் சென்றன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (நவ.3) பிற்பகல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வந்துவிட்டுக் கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டலில் 2 மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து விட்டு இன்று மாலை (நவ.3) விமானத்தில் பெங்களூர் செல்கிறார்.
எனவே, மத்திய நிதியமைச்சர் ஹோட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகளோடு ஆய்வுக்கூட்டம் எதுவும் நடத்துவார். அதற்காக அதிகாரிகள் வெளி மாநிலங்களிலிருந்து வருகின்றனர் என்று விமான நிலைய அதிகாரிகள் எண்ணியுள்ளனர்.
ஆனால், இன்று (நவ.3) காலையிலிருந்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழக அமைச்சர் மற்றும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்காகத் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் கூடுதலாக வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் சோதனைக்கு காரணம் என்ன? முழுத் தகவல்!