சென்னை: திருவண்ணாமலை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன், மகள் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் நான்காவது நாளாக இன்றும் (நவ.6) வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, தனியார் கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட், அப்பா சாமி ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனங்களிலும் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். மேலும், பிரபல திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனின் சென்னை போயஸ் கார்டன் அலுவலகம், மயிலாப்பூர் இல்லம், அவரது மேலாளர் மோகனின் மந்தவெளி இல்லம் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கரூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒரு சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்ற நிலையில் மற்ற இடங்களில் நான்காவது நாட்களாகத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குத் தொடர்புடைய அலுவலகங்களில் நான்காவது நாளாகச் சோதனை தொடர்ந்து வருகிறது.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல் எனத் தகவல்: அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவு அடைந்துள்ளது. அதில் முக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், தனியார் கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. திருவான்மியூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து காசா கிராண்ட் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையிலும் கரூரிலும் பறிமுதலான பணம் யாருடையது?: மேலும், கோயம்புத்தூரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய நான்கு இடங்களில் நான்காவது நாளாகச் சோதனை நீடித்து வருகிறது. அதேபோல், கரூரில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் ஐடி ரெய்டு! அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை!