சென்னை: தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நவ. 3) காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, திருவண்னாமலை உள்பட எ.வ. வேலுவுக்கு சொந்தமான 80 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில், அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், மவுண்ட் ரோடு, வேப்பேரி, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் அவரது வீடு, அருணை பொருளியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, அலுவலகம் மற்றும் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு அமைச்சர் எ.வ. வேலுவின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள், அவரது சகோதரர், மகன், மகள் உள்ளிட்டோர் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நிறுவனங்கள் மட்டுமல்லாது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதோடு பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள், கட்டிடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40 அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டுமான நிறுவனங்களில் பிரபலமாக இருக்கக் கூடிய காசா கிராண்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்புக்கு வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று உள்ளனர். 40க்கும் மேற்பட்ட கார்களில் புறப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சோதனையின் முழு விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொது இடங்களில் வைக்கப்படும் கொடிக்கம்பங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!