தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டல மேம்பாட்டு நிர்வாகியும், அதன் முன்னாள் இயக்குனருமான ராம் பிரசாத் என்பவருக்கு சொந்தமான 16 இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். குறிப்பாக, அவருடன் தொடர்புடைய ஸ்டைன்லெஸ் ஸ்டீல் நிறுவனம் அமைந்துள்ள சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்றது.
இதில், ராம் பிரசாத் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அவரது மாமனாரும், அதிமுக பிரமூகருமான சுகி சந்திரனின் வீட்டில் 15 மணி நேரம்வரை சோதனை நடைபெற்றது. இதில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதாக, ரூ. 160 கோடி ரூபாய் போலி கணக்குகள் காட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மூலதன செலவு, நிறுவன செலவு என ரூ.50 கோடிக்கு போலி கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. ஸ்டைன்லெஸ் ஸ்டீல் நிறுவனத்துக்கு சப்ளை செய்த விவகாரத்தில், கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மொரிசியஸ் நாட்டு நிறுவனம் மூலமாக ரூ. 2,300 கோடி பங்குகளை விற்ற விகாரத்தில் கிடைத்த லாபத்தையும் கணக்கில் காட்டாதது தெரியவந்துள்ளது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில், மொத்தமாக கணக்கில் காட்டப்படதாக ரூ. 450 கோடி சிக்கியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ராம் பிரசாத், அவரது மாமனார் சுகி சந்திரன், ஸ்டைன்லஸ் ஸ்டீல் சப்ளையர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: பண்ருட்டியில் ரைஸ் மில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை