சென்னை அசோக் நகர் ராகவன் காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் தீக்காயங்களோடு மயக்கநிலையில் இருப்பதாக அந்தக் கட்டடத்தின் காவலாளி மூலமாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன்படி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் டெல்லியை பூர்விகமாகக் கொண்ட இவர், தி. நகரில் துணி வியாபாரம் செய்துவரும் தீபக் என்பதும், அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்துவருவதும் தெரியவந்துள்ளது.
சமைக்கும்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தப்பிவந்ததாக தீபக் கூறியுள்ளார். உடனடியாக முதலுதவி அளிப்பதற்காக தீபக்கை காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் சந்தேகமடைந்து அவரது அறையை சோதனை செய்தபோது வெளிப்புறம் பூட்டியிருந்தது காவல் துறையினருக்கு அதிர்ச்சி அளித்தது. உடனடியாகப் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கரைகளோடு கூடிய கத்தி, மண்ணெண்ணெய் கேன் ஆகியவை கிடந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்த காவல் துறையினர் தீபக்கின் செல்போன்களை ஆய்வுசெய்தனர்.
அதில், அவர் அடிக்கடி பேசிய இரண்டு எண்கள் மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில், அருகில் உள்ள சிசிடிவியைக் கைப்பற்றி ஆய்வுசெய்கையில், ஒரு ஆண், பெண் இருவரும் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானநிலைய காவல் துறையினரிடம், அந்த இருவரின் அடையாளங்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களை உடனடியாகப் பிடித்துவைக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் சந்தேகப்படும்படி இருந்த அந்த இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்து குமரன் நகர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட இருவர் டெல்லியைச் சேர்ந்த ஹம்தன், நிலா அக்தர் என்பது தெரியவந்தது. மேலும், தீபக்கும் ஹம்தனும் தி.நகரில் துணி வியாபாரம் செய்துவருவதும் நாளடைவில் வியாபாரத்தில் பெரிய லாபம் இல்லை என்பதால் ஹம்தன் வழிகாட்டுதல்படி மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து அழகிகளை வரவழைத்து பாலியல் தொழில் செய்துவந்ததும் தெரியவந்தது. அவ்வாறு அறிமுகமானவர்தான் நிலா.
இவர்கள் வடமாநிலங்களில் இருந்து அழைத்துவரும் அழகிகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே சென்னையில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உடனடியாக அவர்களை விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு நிலாவை நேற்று முன்தினம் இரவு அவரது சொந்த ஊரான டெல்லிக்கு அனுப்பி வைக்கும்போது, அவரின் மூலம் கிடைத்தப் பணத்தை பங்குபோடுவதில் தீபக், ஹம்தன் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஹம்தன் நிலாவின் உதவியுடன் தீபக்கை கத்தியால் தாக்கியும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திவிட்டு, வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து மும்பை செல்ல திட்டமிட்டிருந்தனர் என்பது விசாரணையின்மூலம் தெரியவந்தது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.