சென்னை: வட இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வழிபடும் பூரி ஜெகந்நாதர் சுவாமி வரலாற்றை பறைசாற்றும் வகையில், சென்னையில் 20 அடி உயரத்தில் பூரி ஜெகந்நாதரின் சிலை வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைந்த புனிதத் தலம், பூரி ஜெகந்நாதர் ஆலயம். இது மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் மிக முக்கியமானது. இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
மேலும், முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.
இந்நிலையில், பூரி ஜெகந்நாதர் சுவாமியின் வைபவம் மற்றும் வரலாறு தென்னிந்தியாவில் அதிகம் அறியப்படாமல் உள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து பக்தர்கள் வட மாநிலங்களுக்கு சென்று வழிபடுவதும் கடினம். எனவே, ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை நினைவூட்டும் வகையிலும், பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இஸ்கான் அமைப்பினரால், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், 20 அடியில் குருவாயூரப்பர் பூரி ஜெகந்நாதரின் சிலை, 10 அடியில் பகவான் பலதேவ் சிலை மற்றும் சுபத்ரா சிலை அமைத்து மூன்று நாட்களுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
முதல் நாளில் வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வழிபாட்டிற்கு வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, பூரி ஜெகந்நாதர் சுவாமிக்கு நடக்கும் மூன்று நாள் சிறப்பு பூஜையில், பூரி ஜெகநாதரின் வரலாறுகளை தமிழில் அனைவருக்கும் கதைகளாக எடுத்துரைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Aiadmk Case: பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் மீண்டும் வெற்றி.. தீர்ப்பின் முழு விபரம், ஓபிஎஸ் பதில் என்ன?