சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து பழங்கால சிலைகள் மற்றும் கலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இதனை மீட்கும் பணியில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 சிலைகள் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கையில், “கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 247 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 1,539 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. முக்கியமாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 187 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன” என்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு கோயில்களில் இருந்து பல்வேறு காலங்களில் திருடப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட சிலைகளை சைபர் கிரைம் குழுவினருடன் இணைந்து பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்சு கலாச்சார மையத்தின் உதவியுடன் புகைப்படங்களைப் பெற்று, அதை ஒப்பிட்டு வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.
அதேபோல் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகளை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வெளிநாடு சென்று சிலைகளை மீட்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், அனுமதி அளித்தவுடன் தனிப்படையினர் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரெஞ்சுக்காரரின் இடத்தில் பழங்கால சிலைகள்: அதிரடியாக மீட்ட சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ்