சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பினை வழங்கி வரும் கல்லூரிகள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகத்தின் அனுமதியையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர் பெற வேண்டும். இதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
2022-23ஆம் கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க். எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.சி.ஏ ஆகிய தொழில் கல்விப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் ஜனவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று மே 2ஆம் தேதி வரையில் அபராதம் இல்லாமலும், மே 7ஆம் தேதி வரையில் 50 ஆயிரம் அபராத்துடனும் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
மேலும், பல்கலைக் கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் அடிப்படையில் கல்லூரியில் நியமனம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கான கல்வித்தகுதியும் முதல் முறையாக அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கல்லூரிகளில் உள்ள வசதிகள் மற்றும் வகுப்பறைகள் குறித்த விவரங்களும் கூகுள்மேப் மூலம் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கியமாக கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. கல்லூரியில் ஆய்வின்போது ஆசிரியர்களின் உண்மைச் சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு, அனுபவச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் ஆய்வுகள் முடிந்தபின்னர், கடந்தாண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை குறைவதற்கும், பாடப்பிரிவுகளை மூடுவதும் நடைபெறும் எனத் தெரிகிறது. பொறியியல் கல்லூரிகளின் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 494 தனியார் கல்லூரிகள், நான்கு அண்ணா பல்கலைக்கழக துறைக்கல்லூரிகள், 13 உறுப்பு கல்லூரிகள், மூன்று மண்டலக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் கடந்தாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 10 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மூடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளது. பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேராமல் உள்ளதன் காரணமாக அங்கீகாரம் பெறுவதற்கு இந்தக் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்து புதியதாக ஆரம்பிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாகவும், கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததாலும், தற்போது ஆண்டுதோறும் கல்லூரிகளை மூடி வருகின்றனர். 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான கலந்தாய்வின்போது மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி கற்பிக்கும் சண்டிகர் பல்கலைக்கழகம்!