சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் பேரவை மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ’’1989ஆம் ஆண்டில் இருந்து நீர் வளத்துறையில் எத்தனை முறை பேசி இருப்பேன். எவ்வளவு கேள்விகளுக்குப் பதில் அளித்திருப்பேன் என்றும் எனக்குத் தெரியாது’’ என்று கூறினார்.
மூத்தவன் என்ற முறையில் கலைஞர் என்ன துறை வேண்டும்? என்று தன்னிடம் கேட்டபோது, குடியானவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏதாவது செய்யமுடியும் என்றால், அதற்கு நீர் வளத்துறை தான் வேண்டும் என்று கலைஞரிடம் தெரிவித்தாகவும் துரைமுருகன் கூறினார்.
மேலும், பொதுப்பணித்துறை போன்று பெயர் இருக்காதே என்று கலைஞர் சொன்னபோது பெயர் எதற்கு? என்று குடியானவர்களுக்கு ஏதாவது செய்தால் போதும் என்று கூறினேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ''ஒரு பைசா மின்கட்டண உயர்வை கண்டித்து பெருமாநல்லூர் போராட்டம் நடந்த நிலையில், கலைஞர் இனி ஒரு பைசா கூட மின்கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டியதில்லை என்று கூறினார். அதற்கான பணிகளை தன்னிடம் ஒப்படைத்து நிறைவேற்றப்பட்டதற்கு கலைஞருக்கு நன்றி தெரிக்கிறேன்'' என அவர் தெரிவித்தார்.
மேலும் ''எல்லோருக்கும் மறைவு வரும், அப்படி தான் மறையும்போது தனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டும். அது போதும்'' என்று உருக்கமாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''நீங்கள் நூறு வருடம் வாழவேண்டும்'' என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ''ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் ஆளுநர் எவ்வளவு வயது எனக்கு என்று முதலமைச்சரிடம் கேட்டபோது, என் அப்பாவுடன் இருந்தவர் என்று பெருமையாக கூறினார். அப்போது தான் உதயாவின் மகனுடனும் நான் இருப்பேன்'' என்று தெரிவித்தாக துரைமுருகன் கூறினார்.
மூத்த உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தனக்கு தரும் மரியாதைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறுத்தினீர்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ’நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை’ வரவேற்றோம். இந்தத் திட்டத்தை நடுரோட்டில் விடவில்லை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்தால் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும். கோதையாறு பாசனத் திட்டம் புனரமைப்பு செய்ய விரிவான திட்ட அறிக்கை ரூ. 2.59 கோடி செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலக்கை அருவியில் அணை கட்ட 2 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோதையாறு பாசனத்தின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களும் 3 ஆண்டுகள் காலத்தில் முடிக்கப்படும்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறோம்’’ அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம் - ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைப்பு!