சென்னை: கடந்த சில நாள்களாகவே சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சசிகலா தான் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
பின்னர் தேர்தல் முடியும் வரை அமைதி காத்த சசிகலா, தற்போது தொண்டர்களிடம் பேசிவருவதால் அரசியலில் ரீ- என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
'புண்ணுக்கு ஆறுதல் போல் இருந்தது'
இன்று வெளியாகியுள்ள புதிய ஆடியோவில், "நான் பிறந்ததில் இருந்து எந்த வெளிமாநிலத்திற்கும் சென்று தங்கியதே இல்லை. எனது நினைப்பு முழுவதும் தமிழ்நாட்டை பற்றி மட்டுமே.
நான் சிறையில் இருக்கும் போது கிடைத்த ஒரே ஆறுதல் தொண்டர்களின் கடிதம் மட்டும் தான். புண்ணுக்கு ஆறுதல் போல் இருந்தது.
சிறையில் இருந்து வெளிவந்த உடன் மறுபிறவி எடுத்ததை போல் உணர்ந்தேன். தொண்டர்களுடன் தான் நான் எப்போதும் இருப்பேன். பழையபடி கட்சியை கொண்டு வந்து விடலாம்" என்று பேசியிருக்கிறார்.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்
இதற்கிடையில், அதிமுக தலைமை உத்தரவின்பேரில் சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றனர். மேலும் சசிகலாவுடன் செல்போனில் பேசிய பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சசிகலாவை அதிமுகவுக்கு அழைக்கும் சுவரொட்டி- பரபரப்பு