சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (55). இவர் புரசைவாக்கத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இதனையடுத்து நேற்று காய்கறி வாங்குவதற்காக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள காய்கறி கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது பாடி மேம்பாலம் அருகே வரும் போது இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆகியுள்ளது. இதனால், அருகிலுள்ள கடைக்குச் சென்று பஞ்சர் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர், அவரிடம் முகவரி கேட்பது போல் கேட்டுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி கட்டையால் தாக்கிவிட்டு 1,500 ரூபாயை பறித்துள்ளனர். மேலும் அவரது கழுத்திலிருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர், கூச்சலிட்டுள்ளார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சக்தி, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க...14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: 4 பேர் மீது பாய்ந்த போக்சோ