சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர், அஜிஸா தம்பதியினருக்கு குறைமாதத்தில் பிறந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலாஸ் உட்பட பல உடல் நல பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த மாதம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீடு திரும்பிய குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் வெளியே வந்ததால் கடந்த மாதம் 25ஆம் தேதி மீண்டும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது குழந்தையின் கைகளில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டிருந்த போது திடீரென குழந்தையின் கைகள் நிறம் மாறத் தொடங்கியதால், செவிலியரிடம் இது குறித்து கேட்டபோது ஒன்றும் இல்லை எனக் கூறியதாகவும், அதன் பின்னர் குழந்தையின் கை அழுகியதால் அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் தனது குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கே காரணம் என குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் குழந்தையின் பெற்றோருக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய் அஜிஸா, தனது குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணமாக இருந்த செவிலியர் மினி மற்றும் அன்று பணியில் இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் தங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட அலட்சியம் போல் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது எனவும், குழந்தைக்கு தலையில் நீர்கட்டி இருந்தது உண்மைதான், ஆனால் இதயத்தில் ஓட்டை இல்லை; ஊசி போட்ட பின் தான் பிரச்னை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் குழந்தைக்கு நீதி கேட்டு மருத்துவரிடம் முறையிட்ட போது, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தன்னை திட்டியதாகவும், விபத்து ஏற்பட்டால் கை, கால் போவது சகஜம் தானே என ஏளனமாக பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் விபத்துகும், சிகிச்சைக்கும் என்ன தொடர்பு என குழந்தையின் தாய் அஜிஸா, ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது அவர் திட்டியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணிப்பூரில் நாளை பள்ளிகள் திறப்பு - இயல்பு நிலை திரும்புகிறதா?