சென்னை: கத்தாரில் நேற்று(டிச.18) நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். சென்னையில் ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் பெரிய திரையில் இந்த கால்பந்து போட்டி ஒளிப்பரப்பப்பட்டது.
குறிப்பாக ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஒளிபரப்பப்பட்ட ஃபிஃபா இறுதிப்போட்டியை 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். அப்போது மெஸ்ஸி கோல் அடித்த மகிழ்ச்சியில் அங்குள்ள இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதில், எதிர்பாராதவிதமாக பட்டாசு சிதறியதில், ராஜேஷ்(20), ரஜினீஷ்(21) ஆகிய இளைஞர்களின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராபின்சன் மைதானத்தின் பராமரிப்பாளராக இருந்து வரும் திமுக வழக்கறிஞரான நாதன் என்பவர், பெரிய திரையில் உலக கோப்பையைக் காண ஏற்பாடு செய்ததாகவும், போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல் பெரியதிரை வைத்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூகுள் தேடலில் ஹிட் அடித்த ஃபிஃபா இறுதிப்போட்டி - ட்ராஃபிக்கால் ஸ்தம்பித்த கூகுள்!