சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இன்று (பிப்.11) காலை 10 மணிக்கு சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதலாவது பொதுக்குழு கூடியது. கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகளில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு இதுவாகும்.
இதில் பொருளாளர், பொதுச்செயலாளர், சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, தேர்தல் வாக்குறுதி என பல தலைப்புகளில் ஆலோசனை நடத்தினர். பொதுக்குழு கூட்டத்தின் தொடக்கத்தில் 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, “மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமலஹாசன் செயல்படுவார். கரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள் என அனைவரின் சேவையையும் மக்கள் நீதி மையம் பாராட்டுகிறது. கிராம சபைகளை நடத்தினால் ஊழல்களும் நிர்வாக குளறுபடிகளும் அமலுக்கு வந்துவிடும் என பயத்தால் கரோனா காரணம் காட்டி கிராம சபைகளை நடத்தாமல் இருக்கும் தமிழ்நாட்டு அரசு செயலை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. பொள்ளாச்சி வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை எப்படியாவது திணித்துவிட வேண்டும் என்னும் பாஜக அரசின் முயற்சிகளை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம், கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த பகீர் மரணங்களின் பின்னணி ஆகியவற்றை அலட்சியம் காட்டாமல் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மையம் அறிவுறுத்துகிறது.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதை தடுத்து நேர்மையான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை தேர்தலுக்கு முன்னரே மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும்” உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.