சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்.24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை (20.10.2023) 05.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அக்.23 ஆம் தேதி வாக்கில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், அக்.24 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை, மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே, 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக்.24 ஆம் தேதி அன்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கனவுத் திட்டம்.. நாளை நடக்கவிருக்கும் சோதனைகள் குறித்த முழு விவரம்!