சென்னை: இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (அக். 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று (அக். 29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய (அக். 30) நிலவரப்படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (அக். 31) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 7 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், இரணியல், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஆகிய பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Kerala Bomb Blast : மருத்துவமனைகள் உஷார் நிலை.. விடுமுறை பணியாளர்கள் உடனடி பணிக்கு திரும்ப அமைச்சர் உத்தரவு!