இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வட தமிழ்நாட்டின் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள மகா புயல் தீவிரப் புயலாக வலுப்பெறும். எனவே, லட்சத்தீவு, மாலத்தீவு, மினிக்காய் தீவுகள், கேரள கடற்கரைப் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் (அக்டோபர் 31, நவம்பர் 1) கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நவம்பர் 4ஆம் தேதியன்று வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட மேற்குத் திசையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
எனவே மீனவர்கள் வடக்கு அந்தமான் கடற்பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு நவம்பர் 4, 5 தேதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று தெரிவித்தார்.