சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.22) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாளை (டிச. 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 24ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து வரும் நாட்களில், மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
6% அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை: தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு மழையைப் பொருத்தவரை, அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதிவரை, தமிழகத்தில் பதிவான மழை அளவு 454.6 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில், இயல்பான அளவு 428.5 மி.மீ இது இயல்பை விட 6% சதவீதம் அதிகம். இதேபோல், 22ஆம் தேதி தரவுகளின் தமிழகம் புதுவை பகுதியில், பதிவான மழை அளவு 2.1 மி.மீ ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு: தமிழகம் புதுவையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், திருநெல்வேலில் மாவட்டத்தில், ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தெங்காசி, தூத்துக்குடி, தஞ்சை, மதுரை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மழை 3 செ.மீ., முதல் 1.செ.மீ., வரை மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை (டிச.23) குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே, 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே, இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வைகை அணையில் கூடுதல் நீர் திறப்பு! முதல் பாசன விவசாயிகள் நடவு பணியில் தீவிரம்!