சென்னை: சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி மண்டி ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் கேம்ப்டோதெசின் உற்பத்தியை அதிகரிக்க, ‘நோத்தபோடைட்ஸ் நிமோனியானா’ தாவர செல்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தி வருகின்றனர்.
ஐஐடி மெட்ராஸ்-இன் தாவர செல் தொழில்நுட்ப ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், கணக்கீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி எம்.நிமோனியானா (M.nimmoniana) தாவர செல்களுக்கான மரபணு அளவிலான வளர்சிதை மாற்ற மாதிரியை உருவாக்கியிருக்கின்றனர்.
கேம்ப்டோதெசின் மருந்தை உற்பத்தி செய்வதற்கு மூன்றாவது அதிக தேவையுள்ள ஆல்கலாய்டு எனப்படும் நச்சுப்பொருளை நோத்தபோடைட்ஸ் நிமோனியானா எனப்படும் அழிந்துவரும் தாவரத்திலிருந்து வணிக ரீதியாக இந்தியாவில் பிரித்தெடுப்பதால் புற்றுநோய்க்குச் சிகிச்சையாக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்குப் பெரிய ஊக்கமாக அமையும்.
புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான கேம்ப்டோதெசினுக்கு நிகரான மற்றும் அதிக பயனைத் தரும் மாற்று ஆதாரமாகத் தாவரத்திலிருந்து பெறப்படும் நுண்ணுயிரி ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாகக் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
ஒரு டன் கேம்ப்டோதெசினைப் பிரித்தெடுக்க ஏறத்தாழ 1,000 டன் தாவரப் பொருட்கள் தேவைப்படுகின்றன. சந்தையில் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகளவில் அழித்ததன் காரணமாக, அதன் முக்கிய தாவர ஆதாரங்களுக்குச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு (IUCN) சிவப்புப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் எம்.நிமோனியானாவின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்துள்ளது. மரபணு அளவிலான வளர்சிதை மாற்றத்திற்கான மாதிரியைப் பயன்படுத்தி தாவர செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் தற்போதைய ஆராய்ச்சியில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவி சரயு முரளி, கம்ப்யூடேஷனல் சிஸ்டம்ஸ் உயிரி ஆய்வகத்தின் மசியா இப்ராஹிம், ஐஐடி மெட்ராஸ் உயிரித்தொழில் நுட்பத்துறை பேராசிரியர்களான கார்த்திக் ராமன், ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா ஆகியோருடன் ஐஐடி மண்டியின் மெட்டபோலிக் சிஸ்டம்ஸ் உயிரி ஆய்வகத்தின் ஷ்யாம் கே.மசகபல்லி, ஷகுன் சைனி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து முதன்மை ஆய்வாளரும் ஐஐடி மெட்ராஸ் உயிரி அறிவியல் துறையின் பூபத் மற்றும் ஜோதி மேத்தா பள்ளியின் பேராசிரியை ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “உயிரி செயல்முறை பொறியியல் கொள்கைகளுடன் வளர்சிதை மாற்றப் பொறியியலை ஒருங்கிணைப்பதன் மூலமாக, மேம்பட்ட மற்றும் நிலையான உற்பத்தியை உறுதிப்படுத்த முடியும். கேம்ப்டோதெசினுக்கு அதிகரித்து வரும் சந்தைத் தேவையைக் குறைவான நேரத்தில் பூர்த்தி செய்வதுடன் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் முடியும் எனக் குறிப்பிட்டார்.
இந்த தொழில்நுட்பத்தைத் தாவர செல்களின் மாதிரி அடிப்படையில் வளர்சிதை மாற்றப் பொறியியலுக்கு மாற்றியமைக்க முடியும். இந்த ஆய்வு கேம்ப்டோதெசின் மற்றும் பிற மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மோனோ டெர்பீன் இண்டோல் ஆல்கலாய்டுகளின் பயனுள்ள மற்றும் திறமையான வணிக உற்பத்திக்கு வழிவகுக்கும். அத்துடன் இயற்கையைச் சார்ந்திருப்பதும் குறைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.
கேம்ப்டோதெசின் (CPT) என்பது தோபோடீகன், இரினோடீகன் போன்ற உயர் மதிப்புள்ள முக்கிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்து முன்னணி மூலக்கூறு ஆகும். காம்ப்டோதேகா அக்குமினாட்டா (கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை), நோதபோடைட்ஸ் நிமோனியானா (இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை) ஆகிய தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சக்தியுள்ள ஒரு தடுப்பானாகும்.
இருப்பினும், காலநிலை மாற்றம் மற்றும் கேம்ப்டோதெசின் பிரித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வனப்பகுதி அழிப்பால் இத்தகைய தாவரங்கள் ஆபத்தான நிலையில் உள்ள இனங்கள் என்ற வகைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வளர்சிதை மாற்ற மாதிரியானது வீட்டுச் சோதனை தரவுகளைப் பயன்படுத்திப் புனரமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டதாகும்.
எம்.நிமோனியானா தாவர செல்களில் கேம்ப்டோதெசின் உற்பத்தியை அதிகப்படுத்த, அதிகளவிலான அழுத்தத்திற்குப் பொருத்தமான நொதி இலக்குகளை அடையாளம் காண்பதற்காகவும் தரவரிசைப் படுத்துவதற்காகவும் கணக்கீட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
மாதிரியால் கணிக்கப்பட்ட நொதியின் அதிகப்படியான வெளிப்பாட்டை நாங்கள் சோதனை அடிப்படையில் சரிபார்த்தோம். மாற்றப்படாத தாவர செல்களுடன் ஒப்பிடுகையில் என். நிம்மோனியானாவின் 5 மடங்கு உயர் கேம்ப்டோதெசின் - அறுவடை தரும் செல் வரிசையை உருவாக்க வழிவகுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள விவரங்களின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட உலகளவில் ஒரு கோடி உயிரிழப்புக்குப் புற்றுநோய் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய புற்றுநோய் பதிவேடு திட்டத்தின் (ICMR-NCRP 2020) படி, இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 15.7 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் புற்றுநோய் நிகழ்வுகளால், புற்றுநோய் தடுப்பு மருந்துகளின் மேம்பட்ட உற்பத்திக்கானத் தேவை காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவு - தருமபுரம் ஆதீனம் மடாதிபதி இரங்கல்!