சென்னை: இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி)ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் நிவர் புயலின்போது பெய்த கனமழையின் போது முக்கியமான தரவுகளைத் திரட்டும் பணியை மேற்கொண்டனர். இந்தத் தரவுகள் சென்னையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைத் தடுப்பதில் முக்கியமான பங்காற்றக் கூடியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் தலைமையில், மாணவர்கள், மேலும் சில பேராசியர்கள் அடங்கி குழு ஒன்று சென்னை அடையாறு ஆற்றில் பல முக்கியமான இடங்களில் புயலின்போது ஆற்றில் இருந்து வெளியேறும் நீரை அளந்து தரவுகளைத் திரட்டியது.
மாணவர்கள், பேராசிரியர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் அக்கௌஸ்ட்டிக் கரண்ட் புரொஃபைலர் எனப்படும் நீரோட்ட அளவு மானியின் உதவியுடன், ஆற்றில் நீரோட்டத்தின் ஒருங்கிணைந்த விகிதத்தைக் கண்டறிவதற்காக ஆற்றின் நீரோட்டத்தையும், அகலவாக்கில் ஆற்றில் வெள்ளம் பாய்வதால் ஏற்படக்கூடிய ஆழத்தையும் அளந்தனர்.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, இது போன்ற நிகழ்நிலைத் தரவுகளைத் திரட்டி, நீர்த்தேக்கங்களில் இருந்து வரும் நீர்வரத்து முறையை ஆராய்ந்து, எண்களின் அடிப்படையில் மதிப்பிட்டிருந்தால், அது வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதற்கு உதவியிருக்கும்.
இதுதொடர்பாக பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் கூறுகையில், ''தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒத்துழைப்புடன் IIT மெட்ராஸ் நடத்திய இந்தக் களப்பணி ஆய்வுகளின் போது திரட்டப்பட்ட தரவுகள், நிகழ்நிலை வெள்ள முன்னறிவிப்பு முறைமை (RTFF) மற்றும் உலக வங்கியின் உதவி பெறும் தமிழ்நாடு நீடித்த நகரவளர்ச்சி திட்டத்தின் (TNSUDP) கீழ் TNUIFLS மூலம் ஒருங்கிணைக்கப்படும் இடம்சார்ந்து முடிவெடுக்கும் முறைமையை (SDSS) செயல்படுத்துவதற்கும், மிகவும் உதவியாக இருக்கும்,'' என்று கூறினார்.
இந்தத் திட்டப்பணியின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி விவரித்த பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், ''நீர்பாயும் வெவ்வேறு ஆழங்களில் (மீட்டர் அல்லது அடி) எந்த அளவுக்கு நீர்பாய்கிறது (m3/s அல்லது ft3/s) என்பதைப் புரிந்து கொள்வதற்கு, ஆற்றின் முக்கியமான பகுதிகளில் ரேட்டிங் கர்வுகளை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு ரேட்டிங் கர்வ் உருவாக்கப்பட்டுவிட்டால், நீர்மட்ட சென்ஸர்களின் ஒருங்கிணைந்த நெட்வொர்க்கை ஏற்படுத்தி, ஆற்றில் இருந்து வெளியேறும் நீரின் அளவை தொலைவில் இருந்தபடியே, தானாகவே கண்காணிக்க முடியும்,'' என்று கூறினார்.
சோமங்கலம், மணிமங்கலம், ஆதனூர், கூடுவாஞ்சேரி ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறிய நீரினாலேயே அடையாறு ஆற்றில் 70 முதல் 80 சதவிகிதம் வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் என்பது இந்தக் களப்பணி ஆய்வில் தெரியவந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து:
நீர்மட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மதகுகள் பொருத்தப்பட்டுள்ள செம்பரம்பாக்கம் ஏரியைப் போன்று பிற ஏரிகளில் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டின் வெள்ளப்பெருக்கின்போது கிட்டத்தட்ட இல்லாமலே இருந்தது.
இந்தக் குறைபாட்டை உணர்ந்த மாநில பொதுப்பணித் துறை வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்பே, பல சிறிய ஏரிகளில் தடுப்பணைகளைக் கட்டத் தொடங்கியது. 2015 டிசம்பரில் சென்னை நகரில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின்னர் இந்தத் தரவுகளைத் திரட்டும் பணித்திட்டம் தொடங்கியது.
ஐஐடி மும்பை, அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தேசியக் கடலோர ஆராய்ச்சி மையத்துடன் சேர்ந்து சென்னை ஐஐடி ஒரு முன்னோடி வெள்ள முன்னறிவிப்பு சிஸ்டத்தை உருவாக்கியது. இதற்கு இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் நிதி உதவி வழங்கியது.
இந்த நிதி உதவியை வைத்து 2017-ஆம் ஆண்டில் 15 தானியங்கி வானிலை நிலையங்கள், மழை அளவு மானிகள், 6 நீர்மட்ட பதிவுக் கருவிகள் அடங்கிய நெட்வொர்க் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
எனினும், 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்த எல்லா ஆண்டுகளிலும் இயல்பு அளவுக்குக் குறைவாகவே பருவமழைப் பொழிவு இருந்த காரணத்தால், ஆற்றின் முக்கியமான பகுதிகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு பற்றிய துல்லியமான நிகழ்நிலைத் தரவுகளைத் திரட்ட முடியாமல் போனது. இதனால் முன்னோடி வெள்ள முன்னறிவிப்பு சிஸ்டத்தின் மாடல்களைச் சரிபார்க்க முடியவில்லை.
நிவர் புயலின் போது திரட்டப்பட்ட தரவுகள்:
இந்தத் திட்டப்பணியின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்த சென்னை ஐஐடி சிவில் இஞ்சினியரிங் துறைப் பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், '' நிவர் புயலின்போது நடத்தப்பட்ட களப்பணி ஆய்வுகளில் திரட்டப்பட்ட தரவுகளில் இருந்து, அடையாறு ஆற்றின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 70 சதவிகிதம் அனகாபுத்தூரில் உள்ள அடையாறு பகுதியில் இருந்தும், மீதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரினாலும் ஏற்பட்டது என்பது தெரியவந்தது.''
நிவர் புயலின்போது சென்னையில் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை என்ற போதிலும், நகரின் சில பகுதிகளில் சிறிது வெள்ளமும், நீர் தேங்கியிருந்து. 2020 டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீடித்த கள ஆய்வின்போது திரட்டப்பட்ட தரவுகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் நீரியல் நடைமுறைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைத் தந்து, எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைக் கண்டறியவும் உதவியாக இருக்கும்.
மேலும், திரட்டப்பட்ட தரவுகள் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்துவிடப்படுவதை நிர்வகிக்கவும், நிதானப்படுத்தவும் பெருமளவில் உதவியாக இருப்பதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுவதற்கும், வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அலுவலர்களுக்கு போதுமான கால அவகாசம் அளிக்கும்,'' என்றார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியுடன் கைகோர்த்த விப்ரோ ஜி இ ஹெல்த்கேர்