சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ’காலநிலை மாற்றம் காரணமாக எல்லை தாண்டிய இடம்பெயர்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நெறிமுறை கட்டமைப்பை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப கட்டத்திலேயே சரியான நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சென்னை ஐஐடி மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியர் சுதிர் செல்லராஜன் கூறுகையில், "சமீபத்திய ஆண்டுகளில், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரித்ததால் அதிக அளவில் இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் குடிசைப்பகுதிகள் இதற்கு சான்றாகும். மழை வெள்ளம், கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வங்கதேச தலைநகருக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
காலநிலையினால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பதற்கு நடைமுறையில் உள்ள சர்வதேச சட்டம் போதுமானதாக இல்லை. 2020ஆம் ஆண்டில் 40.5 மில்லியன் மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். 30 மில்லியன் பேர் காலநிலை, வானிலை தொடர்பான பேரிடர்களால் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் என இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த மக்களை பாதுகாக்க நடைமுறையில் உள்ள சர்வதேச சட்டம் போதுமானதாக இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏர் டாக்ஸியில் பயணிக்க விருப்பமா? 2024இல் தயாராகுங்கள்.. தொடர் சோதனையில் சென்னை ஐஐடி!