சென்னை: இந்திய தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐஐடி, நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை டிஜிட்டல் வழியில் கல்வியாக வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொழில்முறை ஊழியர்களுக்கான நிர்வாகக் கல்விப் பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. மின் வாகனப் பொறியியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை உள்ளிட்டத் துறைகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுபோன்ற பயிற்சிகளை ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் நேரில் வழங்குவதையே ஐஐடி பாரம்பரியமாகக் கொண்டிருந்தது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளவர்களை இந்த பயிற்சித் திட்டத்தின் கீழ் கொண்டு வரும் விதமாக தற்போது ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
ஏற்கனவே என்பிடிஇஎல் மற்றும் ஐஐடிஎம் பிஎஸ் பயிற்சிகள் முதற்கட்டமாக ஆன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த வெற்றியைத் தொடர்ந்து தொழில்முறை நிபுணர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த தொழில்நுட்ப பயிற்சியை அளிக்க ஐஐடி முன்வந்துள்ளது.
இதில் வாரந்தோறும் நேரலை கலந்துரையாடல், பேராசிரியர்களின் தனிக் கவனம், ஐஐடி சென்னை வளாகத்தை நேரில் பார்வையிட்டு அங்குள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.
எரிபொருள் வாகனங்களிலிருந்து மின்சார வாகனத்திற்கு மாறும் வாகன தொழில்துறைக்கு கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் இந்தத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்புகள் இருப்பதால், திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்படும் என்பதால் இது சார்ந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மின்சார வாகன பொறியியல் துறை பயிற்சியில், மின்சார வாகனங்களில் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படைத் தத்துவங்கள் முக்கிய அம்சமாக இடம்பெறும். ஏற்கனவே, முதலாவது கூட்டுப் பயிற்சி முகாம் நிறைவடைந்து, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாவது கூட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து 3வது கூட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இந்த பயிற்சியில் பங்குபெற்று பலன் பெற விரும்புவோர் https://code.iitm.ac.in/ExecEdu மற்றும் support-elearn@nptel.iitm.ac.in என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்.
ஐந்து சான்றிதழ் பயிற்சி முகாம் ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை ஜூன் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை ஐஐடி பிரதான படிப்புகள் மட்டுமின்றி, திறன் வளர்ச்சிக்கான பல்வேறு வாய்ப்புகளை தங்களது வளாகத்தில் வழங்குகிறது. இதனை மாணவர்கள் முறையாக பயன் படுத்தினால் தொழில் ரீதியான வளர்ச்சியை அடையலாம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.