கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு மானுடவியல் படித்துவந்தார். நவம்பர் 9ஆம் தேதி இவர், தனது விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். இதனிடையே பாத்திமா தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்களை கைதுசெய்ய வலியுறுத்தி, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஐஐடி கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் மாநில பொதுச்செயலாளர் தினேஷ் கூறுகையில், "கல்லூரி மாணவி பாத்திமாவின் படுகொலை ஒட்டுமொத்த இந்தியாவை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். ரோகித் வெமுலா, அனிதா, சரவணன் போன்றவர்களைத் தொடர்ந்து தற்போது பாத்திமா இணைந்துள்ளார்'' எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் நிகழும் படுகொலைகளைத் தடுக்க வேண்டும். ஐஐடி போன்ற மத்திய கல்லூரி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தி சமூக நீதியை காக்க வேண்டும். பாத்திமா தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ’ஃபாத்திமாவின் மரணத்திற்கு உரிய பதிலளிக்க நாம் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம்’ - பாலபாரதி