சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி 84,000 நபர்களிடம் சுமார் ரூ.6,000 கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதாக ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்தனர். வழக்குத் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து ரூ.1.12 கோடி ரொக்கம், ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், 16 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் ஆவணங்களைப் பெற்று அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தின் முக்கியத் தரகராக செயல்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் பிரபு ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சகோதரர்களான அவர்களிடமிருந்து சொகுசு கார், இரண்டரை லட்சம் பணம், செல்போன், லேப்டாப், பாஸ்போர்ட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இருவரையும் கடந்த 3ம் தேதி முதல் இன்று (மே 8) வரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய முகவர்களாக செயல்பட்ட இருவரும் காஞ்சிபுரத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.300 கோடி வரை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் பல கோடி ரூபாயை கமிஷனாகப் பெற்று காஞ்சிபுரத்தில் சொத்துகள் குவித்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபு மற்றும் வெங்கடேசனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 100 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது என சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அவற்றை முடக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கட்டணம் இல்லா பேருந்து சேவை: தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம் - அமைச்சர் சிவசங்கர்