செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். சிவசங்கர் பாபா டெல்லியில் நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 16) பிற்பகலில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இரவோடு, இரவாக பாபாவை சென்னைக்கு சிபிசிஐடி காவலர்கள் அழைத்து வந்தனர்.
அப்போது, பாலியல் புகார் தொடர்பாக, சிபிசிஐடி காவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தை காணொலியாக பதிவு செய்தனர். இந்த விசாரணைக்கு பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
தற்போது அவரை 15 நாள் ( ஜூலை 1 ஆம் தேதி வரை) சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது புகார் கொடுக்க வேண்டுமென்றால் inspocu2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!