13ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடங்களைக் கடந்துவிட்டன. எனவே, 14ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் செயலர் இளங்கோவன், குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 67 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச சங்க செயலாளர் நடராஜன், "இன்றைய 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில் நாளை தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அங்கு ஏற்படுகின்ற முடிவைப் பொறுத்து டிச. 7ஆம் தேதி நடைபெறவுள்ள காத்திருப்புப் போராட்டம் தொடரும்.
இன்றைய பேச்சுவார்த்தை ஒரு நாடாகமாகவே நடந்து முடிந்துள்ளது. நாங்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கைக்கும் மழுப்பலான பதிலையே போக்குவரத்துச் செயலாளர் அளித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும்தான் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்றால் காலம் தாழ்த்துகின்ற ஏற்பாடாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்" என்றார்.
முன்னதாக போக்குவரத்துப் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனக் கூட்டம் நடப்பதற்கு முன் போக்குவரத்துத் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்