விழித்திறன் இழந்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று பணிக்காக காத்திருக்கும் அனைத்து விழித்திறன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.
உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிக்கு காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களை வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்ட விழித்திறனற்ற அனைத்து பட்டதாரிகளையும் எவ்வித பாகுபாடுமின்றி உதவி பேராசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி, துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை படி விழித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
படித்துப் பட்டம் பெற்ற இவர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என போராடும் நிலை உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை என்ற அரசு ஆணையை திமுக ஆட்சி அமைந்தவுடன் இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கண் பார்வையற்ற மாணவனுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்!