2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சித் தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐந்தாம் கட்ட பரப்புரையில் ஈடுபடுவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் கோவைக்குச் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம். ரஜினி எடுத்த முடிவு அவரது விருப்பம். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ரஜினிக்கு வெளியில் இருந்து அழுத்தம் வந்து விடக்கூடாது.
தேர்தல் பரப்புரைகளுக்கு செல்லும் போது மனதிற்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மக்களிடம் அரசியல் வாக்குறுதி தருவார்கள். ஆனால் செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களுக்கு வாக்குறுதி தருவது மகிழ்ச்சியாக உள்ளது. திட்டமிடாத இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது மக்கள் தனக்கு அளிக்கும் வாழ்த்தாக கருதுகிறேன். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு மக்கள் நீதி மய்யத்திற்கு சிறப்பாக இருக்கும்.
திரையரங்கில் 50 விழுக்காடு இடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க எடுத்த முடிவு ஆரோக்கியமானது. திரையரங்க தொழிலும் நடக்க வேண்டும். அதனுடன் மக்கள் ஆரோக்கியத்தின் மீதும் அரசு கவனம் செலுத்துவது நல்லது. சிறையிலிருந்து சசிகலா விடுதலையானால் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து தனக்கு தெரியவில்லை.
மக்கள் நீதி மய்யம் தருவது இலவசம் கிடையாது. மக்களுக்கு அரசு செய்யும் முதலீடு. வீட்டிற்கு மின்சாரம், போக்குவரத்து வசதி தருவது போல் அரசு சொத்துகளை மக்களும் பாதுகாக்க வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவசமாக டேட்டா தருவது நல்ல முடிவே என்ற அவர், இறுதியாக தமிழ்நாடு வெற்றி நடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்" என்றார்.
இதையும் படிங்க: வா தலைவா! வா - ரஜினியின் அரசியல் வருகைக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்