சென்னை: சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து, பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது. இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி- சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த அமைப்பு விதிமுறைகளுக்கு மாறாக கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி இருக்கிறது எனவும், இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தை மோசடியாக பயன்படுத்தி இருக்கிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த ஹரிஷை, நேற்று(மார்ச்.5) ஆம்பூர் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதே அமைப்பு, கடந்த ஆண்டு நடிகர் பார்த்திபன், சமையல்கலை வல்லுனர் செப் தாமு, பாரதிராஜா உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ், "அண்ணா பல்கலைக் கழகத்தின் விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா சம்பந்தமாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தனர்.
அதன் அடிப்படையில் பல்கலைக் கழகத்தின் பதிவாளர், கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் அவர்களிடம் இருந்த ஆவணங்களை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நேற்று சமர்ப்பித்திருந்தனர். கோட்டூர்புரம் காவல்துறையினர் ஹரிஷை கைது செய்துள்ளனர்.
பட்டம் வழங்கிய நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரங்கத்தை வாடகைக்கு அளிக்கும் போது பாராமரிப்புப் பணிக்கு மட்டும் இரு தொழில்நுட்பப் பணியாளர்கள் இருப்பார்கள். பல்கலைக் கழக தரப்பில், அங்கு வீடியோ எதுவும் எடுக்கவில்லை.
பல்கலைக் கழகத்திற்குள் கோட்டூர்புரம், மெயின் கேட் வழியாக யார் வருகிறார்கள், செல்கிறார்கள் என்பதை வீடியோ பதிவு செய்வோம். அதிலும் காருக்குள் வரும் நபர்கள் யார் என்பது தெரியாது. அரங்கிற்குள் எந்தவிதமான கேமராவும் இருக்காது.
இதுபோல பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அந்த அமைப்புகள் விருது வழங்கும் போது, சிறந்த 3 பேருக்கு இலவசமாக அளித்து விட்டு, அதன் பின்னர் மற்றவர்களுக்குப் பணம் வாங்கிக் கொண்டு விருது வழங்குகின்றனர். பொதுமக்கள் விருது வரும்போது வரும் என்று விட்டுவிட்டு, தங்கள் பணிகளை செய்ய வேண்டும். பணம் கொடுத்து விருது வாங்க முயற்சிக்கும்போது, ஏமாற்றுக்காரர்களும் வருவார்கள்" என்று கூறினார்.