சென்னை: மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக, ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் சிதம்பரம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியார் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, "கள்ளம் கபடம் இல்லாத நபராக ராகுல் காந்தி உள்ளார். அது தான் பிரச்னையாக உள்ளது. ராகுல் காந்தி பேசும்போது மோடி அடிக்கடி தண்ணீர் குடித்தார். அவரது கைகள் நடுங்கியது. பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக மான நஷ்ட வழக்கு போடப்பட்டும், அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதும் இது தான் முதல் முறை. MP (member of parliement) பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்துள்ளனர். நேரு, காந்தி குடும்பத்திற்கு சாதி, மதம் பாகுபாடு பார்க்கக்கூடிய குடும்பம் கிடையாது.
ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது சாதி, மதம் என்று பாராமல் மக்கள் அனைவரும் அவரை அரவணைத்தனர். அப்படி மக்களால் நேசிக்கப்படும் தலைவர். மக்களோடு மக்களாக இருக்கும் அவர் எப்படி சாதியைப் பற்றி பேசுவார். பொது மேடையில் பேசியதற்கு மான நஷ்ட வழக்கு தொடுத்து தண்டனை கொடுத்தால் யாரும் பொது மேடையில் பேச முடியாது. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போது, நியாயம் கிடைக்கும் வரை நாடளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்யப்போகிறோம். தேவைப்பட்டால் நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம்" எனத் தெரிவித்தார்.
இதேபோல் சைதாப்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தேனாம்பேட்டையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாலு உள்ளிட்ட 7 இடங்களில், சென்னையைச் சுற்றி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விவகாரம் குறித்து நான் கருத்துச்சொல்வது சரியாக இருக்காது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை