மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவெடுத்து அதை கையகப்படுத்தி, அதற்கான தொகையை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.
வேதா நிலையம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், போயஸ் கார்டன் குடியிருப்போர் சங்கம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், வீட்டிற்கு இழப்பீடு தொகையை நிர்ணயித்து, அந்தத் தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் செலுத்தியதை எதிர்த்து தீபாவும் வழக்கு தொடர்ந்தார்.
பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா:
இந்த வழக்குகள் நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, தீபக் வழக்கிற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 17ஆம் தேதி அறிவித்ததையடுத்து, கையப்படுத்தவும், அதற்கான இழப்பீடு நிர்ணயிக்கவும் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார்.
அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகே கையகப்படுத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை கண்டிப்பாக பாராட்டி இருப்பார். ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டபோது அவருடன் ஜெ.தீபக் உடனிருந்ததில்லை” என்றும் பதில் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கு விசாரணை தள்ளிவைப்பு:
மேலும், தமிழ்நாடு மக்களை தங்களது குடும்பத்தினராக நினைத்து ஓய்வில்லாமல் உழைத்த ஜெயலலிதாவின் உழைப்பு, தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு அவரது பங்களிப்பை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நினைவு இல்லமாக மாற்ற மனப்பூர்வமான முடிவை அரசு எடுத்துள்ளதாகவும் பதில்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும்போது, மிகச்சிறந்த தலைவர் வாழந்த இடத்தை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வருவார்கள் என்றும் குடியிருந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சுற்றுச்சூழல் பாதிப்பு சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தீபக்கின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஷேஷசாயி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்!