சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்ட ராமசுவாமி கோயிலில் 1972ஆம் ஆண்டு மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அம்மன், சிவகாமி அம்பாள் சிலை, நான்கு கணபதி சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டது. பின்னர் விசாரணையில் நடராஜர் சிலையை தவிர மற்ற சிலைகள் மீட்கப்பட்டது தெரியவந்தது.
ஆனால், திருட்டு போன நடராஜர் சிலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி பிரான்ஸ் கிறிஸ்டிஸ்.காம் ஏல நிறுவனம் திருடு போன நடராஜர் சிலையை 20,0000 முதல் 30,0000 யூரோக்கள் விற்க திட்டமிட்டு பதிவு செய்திருந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி பார்த்துள்ளார்.
இதனையடுத்து திருட்டு போன நடராஜர் சிலை படத்துடன், ஏல நிறுவனம் விற்க முயன்ற படத்தை ஒப்பிட்டு பார்த்த போது இரண்டுமே ஒன்று என தெரியவர, ஏலத்தை நிறுத்துமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி டிவிட்டரில் டேக் செய்து ட்விட் செய்தார்.
பின்னர் பிரான்சின் இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப்பை தொடர்பு கொண்டு சிலை குறித்தான தகவலை தெரிவித்து ஏலத்தை நிறுத்தினார். இதையடுத்து ஆவணங்களை சமர்பித்து பிரான்சில் உள்ள நடராஜர் சிலையை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கோவில்பாளையம் அருள்மிகு தோளீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சந்திரசேகர் அம்மன் ஒற்றை பீடத்திலும் மற்றும் நடனமாடும் சம்மந்தர் ஆரத்தழுவி இருக்கிற உலோக சிலை ஒன்று திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, திருடு போன ஆலிங்கன மூர்த்தி சிலை அமெரிக்கா சோதேபியின் ஏல நிறுவன பட்டியலில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். 1998ஆம் ஆண்டு சோதேபிஸ் 85000 டாலருக்கு ஆலிங்கன மூர்த்தி சிலையை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ஏலம் விடப்பட்ட இந்த சிலையை வாங்கிய நபர் யார் என்பது குறித்து தேடி வருவதாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்து ஆலிங்கன மூர்த்தி சிலையை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் பழங்கால கற்களால் ஆன புத்தர் சிலையை திருடியதாக கடந்த 2003 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு இந்த சிலை திருட்டிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் 2010ஆம் ஆண்டு ஆசிரியர் ராஜகோபாலன் வெளியிட்ட புத்தகத்தில் திருடு போன புத்தரின் படங்கள் கடந்த கால அட்டவணையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டையும் ஒப்பிட்டு பார்த்த போது ஒன்று என தெரியவந்தது. மேலும் திருடுபோன புத்தர் சிலை மன்ஹாட்டனில் உள்ள சுபாஷ் கபூரின் கிடங்கில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். அதற்கான ஆவணங்களை சமர்பித்து ஒரு வார காலத்திற்குள் புத்தர் சிலையை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நகரமயமாக்கல் காரணமாக கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு - உயர் நீதிமன்றம்